Showing posts with label ந. பச்சைபாலன் கவிதைகள். Show all posts
Showing posts with label ந. பச்சைபாலன் கவிதைகள். Show all posts

Thursday, October 6, 2016

மன்னித்தேன் தோழா - ந.பச்சைபாலன்





கவிதையின் பாடுபொருள்
இக்கவிதை ஒருவரின் மன்னிக்கும் குணத்தைக் கருவாகக் கொண்டுள்ளது.

கவிதையின் விமர்சனம்

மற்றொருவன் தனக்குப் பல கொடுமைகளைச் செய்திருந்தாலும் அதனைப் பெரிதாகக் கருதி அவனைத் தண்டிக்க எண்ணாமல் மன்னித்துவிடத் தயாராக இருக்கும் ஒருவனின் மனதை கவிஞர் இக்கவிதையில் வலியுறுத்தியுள்ளார். ஒருவன் கஷ்டத்தில் இருந்து கண்ணீர் விடும்பொழுது அதனைப்பார்த்து ஆனந்தம் அடையவும், வெற்றியடைந்தால் பார்த்து பொறாமைப்படவும் செய்கிறான் அவனை சுற்றியுள்ள நண்பன். இவை அனைத்தும் அவன் தானாகச் செய்யவில்லை. அவனுடைய அறியாமை, ஆணவம், கெட்ட எண்ணங்கள் அனைத்தும் அதற்கு துணையாக இருந்தது. எதுவாக இருந்தாலும், அவன் செய்த அனைத்து கொடுமைகளையும் மன்னிக்கப்படுகின்றன.

இன்றைய சூழல்
இன்றைய சூழலிலும் தவறுகள் செய்யும் மனிதர்களும் அதனை பெருந்தன்மையோடு மன்னிக்கும் மனிதர்களும் இருக்கவே செய்கின்றனர். அடுத்தவர்களின் வெற்றியைக் கண்டு சந்தோஷப்படாமல் பொறாமைப்படும் மனிதர்கள் தான் இப்பொழுது அதிகமாக உள்ளார்கள். அதுமட்டுமல்லாமல், தங்களுடைய வேலைகளில் கவனம் செலுத்தாமல் அடுத்தவர்களை முன்னேறவிடாமல் தடுப்பதற்குப் பாடுப்பட்டுக்கொண்டிருக்கும் மனிதர்கள் தற்பொழுது அதிகம். அதோடு, மற்றவர்களுக்குத் தீங்கு விளைவிப்பதில் முதலாளாகவும்  இருக்கின்றார்கள். இவ்வாறான போக்குகளுடைய மனிதர்கள் சிலர் இருந்தாலும், இவர்களைப் பெருந்தன்மையுடன் மன்னித்து தன்னுடைய வாழ்க்கையின் அடுத்தக்கட்டத்திற்குச் செல்லத் தயாராக இருக்கும் மனிதர்கள் சிலர் இப்புவியில் இருக்கவே செய்கின்றார்கள்.

Wednesday, October 5, 2016

மரநானூறு - ந.பச்சைபாலன்




கவிதையின் பாடுபொருள்
இக்கவிதையானது தோட்டப்புறத்தில் வாழும் ஒரு தந்தையின் தியாகத்தை மையமாகக் கொண்டுள்ளது.

கவிதையின் விமர்சனம்
தோட்டப்புறத்தில் வாழ்ந்து கொண்டு குடும்பத்திற்காக உழைப்பதை தன்னுடைய சந்தோஷமாகவும், எவ்வளவு உழைத்தாலும் சோர்ந்துப் போகாமல் அச்சுமையை சுகமாகவும் கருதும் ஒரு தந்தையைப் பற்றி கவிஞர் இக்கவிதையில் வலியுறுத்தியுள்ளார். அப்பாக்கள் எப்போதுமே தாயுமானவர்கள்தான். தனக்கு கல்வியறிவு இல்லையென்றாலும், தங்கள் பிள்ளைகள் கல்வியறிவு பெற்றிட வேண்டும் என்பதற்காக உழைப்பவர்கள். அவர்களின் உயரத்தைத் தங்களுடைய பிள்ளைகள் தாண்டிச் செல்ல பல கனவுகளைச் சுமந்துக்கொண்டிருப்பவர்கள். அதுமட்டுமல்லாமல், பிள்ளைகளின் முன்னேற்றத்திற்குத் தூண்களாக இருப்பவர்கள்.

இன்றைய சூழல்
தற்போதைய சூழலிலும் இன்னும் சிலர் தோட்டப்புறங்களில் வாழ்ந்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள். அவ்வாறு வாழ்ந்துக் கொண்டிருக்கும் குடும்பத்தில் இருக்கும் தந்தைமார்கள் பலர் தங்களுடையத் தொழிலை ஒருபொழுதும் சுமையாகக் கருதியதில்லை. தங்களின் குடும்பத்திற்காகவும் பிள்ளைகளின் கல்வியறிவிற்காகவும் அயராது உழைத்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள். அவர்களைக் காட்டிலும் தங்களுடைய பிள்ளைகள் உயரத்தில் இருக்க வேண்டும் என்று பல கனவுகளைச் சுமந்துக் கொண்டிருக்கின்றார்கள். மேலும், பல தியாகங்களைச் செய்து பிள்ளைகளின் முன்னேற்றத்துக்கு வேர்களாய் இருந்துக் கொண்டிருக்கின்றனர்.

காசின்றி அமையாது உலகு - ந.பச்சைபாலன்




கவிதையின் பாடுபொருள்
இக்கவிதைப்  பணத்தின்  முக்கியத்துவத்தை  மையமாகக் கொண்டுள்ளது.

கவிதையின் விமர்சனம்

பணமின்றி இந்த உலகத்தில் எதுவுமில்லை என்பதனை கவிஞர் இக்கவிதையின் மூலம் எடுத்துக்கூறியுள்ளார்.  பணத்தின் முக்கியத்துவம் அதிகமாக உள்ளது. மனிதர்கள் அன்றாடம் உண்ணும் உணவு, அணியும் உடை, வசிக்கும் இடம் அனைத்திலும் பணத்தின் பயன்பாடு உள்ளது. கடவுளை நெருங்குவதற்குக்கூடப் பணம்தான் தேவைப்படுகின்றது. சில இடங்களில் பணம் கொடுக்கவில்லை என்றால் வேலை வாய்ப்புக்கூடக் கொடுக்கப்படுவதில்லை. அதுமட்டுமல்லாமல், தேர்தலில் போடப்படும் ஒவ்வொரு வாக்குக்கும்  இடத்திற்கு ஏற்றவாறு விலை நிர்ணயம் செய்யப்படுகின்றது. சுருக்கமாகச் சொல்லப்போனால், இவ்வுலகம் நீரின்றிகூட நகரும், ஆனால் பணமின்றிச் செயல்படாது. 

இன்றைய சூழல்
இன்றைய நிலையில், பணத்தின் பயன்பாடு அதிகமாகக் கூடியுள்ளது. பணமின்றி எதுவும் இயங்காது என்ற ஒரு நிலை இப்பொழுது ஏற்பட்டுவிட்டது. பணம் என்னும் கருவிதான் ஒரு அரசாங்கத்தை உருவாக்கவும் செய்கிறது. மற்றொரு அரசாங்கத்தை வீழ்த்தவும் செய்கிறது. பணத்தின் தேவையென்பது ஒரு குழந்தைப் பிறக்கும்போதே தொடங்கிவிடுகின்றது. மேலும், இன்றைய நிலையில் மனிதன் பிறந்தது முதல் இறக்கின்றவரை, இறந்தபின் புதைப்பதோ அல்லது எரிப்பதோ வரை பணம் தன்னுடைய அத்தியாவசியத்தை ஒவ்வொரு நொடியிலும், ஒவ்வொரு நிகழ்விலும் மனிதனுக்கு உணர்த்திக் கொண்டேதான் இருக்கின்றது. பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. ஆனால் பணம் இல்லையாயின் யாருக்கும் உன்னைத் தெரியாது என்ற நிலையில்தான் உலகம் இன்று நகர்ந்துக் கொண்டிருக்கின்றது.